ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என, சர்வதேச முதலீட்டு நிறுவனமான 'கோல்டுமேன் சாக்ஸ்' மதிப்பிட்டுள்ளது.
இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக 'கோல்டுமேன் சாக்ஸ்' நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சம் வருவாய் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு 2.4 கோடியாக இருந்தது. தற்போது அது 6 கோடியாக உள்ளது. 2027 ஆம் ஆண்டில் 10 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவு, ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகள் பெரும் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட் தவிர்த்து, பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில், 12 கோடிக்கும் மேற்பட்ட டீமேட் கணக்குகள் உள்ளன. அதே சமயம், மேல் வர்க்கத்தினருக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையில் செலவு செய்யும் திறனில் இன்னமும் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.